காட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.
ஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.
மறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா! நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா?. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு!’ என்று கூறி விட்டு போய்விட்டார். மன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.
தான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
அரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.
ஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்?’ எனக் கேட்டான்.
‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.
அதற்கு அவளது கணவன், ‘ஓ! தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா?’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.
பின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி! என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்மம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.
ஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.
தவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும். உண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.
நாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன!
Applications are invited only through online mode for direct recruitment to the posts in Combined Technical Services Examination (Non - Interview Posts). Date of Notification: 21.05.2025 Date of commencement of receiving application: 27.05.2025 Last date and time for submission of online application: 25.06.2025 Application Correction Window period: 29.06.2025 12:01 AM to 01.07.2025 11:59 PM ***Exam Date: August 4 - 10*** Click here to download the Notification: TNPSC - CTS - Non Interview Posts: Adv No 711: Notification No: 09/2025 Date 21.05.2025 Addendum to TNPSC - CTS-Non Interview Posts: Notification No: 9A/2025 Date: 11.06.2025
Comments